Blog

’காலத்தில் பயணம்’ - புத்தக விமர்சனம்.

விமர்சனம் எழுதியவர்: ALP Astrologer. Acupuncturist. Kuntikana RadhaKrishna Bhat.

‘காலத்தில் பயணம்’ நூலின் ஆசிரியர்: முனைவர். சி. பொதுவுடைமூர்த்தி. 

நூல் ஆசிரியர் பற்றி:

நூலின் ஆசிரியர், ஜோதிட உலகில், பாரம்பரிய ஜோதிடத்தை இக் காலத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கி, ’அட்சய லக்ன பத்ததி’ எனும் ALP ஜோதிட முறையை கண்டுபிடித்து, குறிப்பிடத் தக்க பங்களிப்பு செய்தவர். 

இது, அவருடைய 8 வது நூல்.  

தான் கண்டறிந்த ALP ஜோதிட முறையை பயன்படுத்தி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஜாதகங்களை ஆய்வு செய்து, தன்னுடைய ஜோதிடக் கணக்கீடுகள் சரியானவை என்பதை, நிரூபித்துள்ளார். 

ALP ஜோதிட முறையை உலகெங்கும் இருக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேர்முக வகுப்புகள் மூலம் கற்பித்து வருகிறார். 

இவர், தமிழக அரசின் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஓலைச்சுவடித் துறையில், ‘சோதிடம் சார்ந்த ஓலைச் சுவடிகளின் பதிப்புகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர். 

வகை:

பண்டைய கால வாழ்க்கை முறைகளையும் தற்காலிக வாழ்க்கை முறைகளையும் ஒப்பிடுதல். 

தொகுப்பு:

காலம், கர்மா மற்றும் ஜோதிடம் சார்ந்த வகைகளின் தொகுப்பாக இந்த நூல்  அமைந்துள்ளது. 

மொத்த பக்கங்கள்: 282.

நூலின் முக்கிய அம்சங்கள்:

இந்த நூல், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

முன்னுரையில் இருந்து முடிவுரை வரை வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும், அக் கதைகளின் மறுபக்கங்களும் சொல்லப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு நிகழ்வையும் 2-3-4 கோணங்களில் காட்டுகிறது இந்த நூல்.  

உதாரணமாக, எந்த ஒரு செயலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடந்தால் என்ன, நடக்காமல் போனால் என்ன; அதன் விளைவுகளான நல்லது கெட்டவற்றை, இப்படித் தனித்தனியாக உள் முகமாகவும், வெளி முகமாகவும், புறத் தோற்றங்களை வைத்து நாம் எப்படி முடிவெடுக்கிறோம்; எப்படி முடிவு எடுக்க வைத்து, காலம் நம்மை எவ் வண்ணம் நகர்த்துகிறது; எது நல்லது, எது கெட்டது என முடிவெடுக்கும் இடத்தில் கவனத்துடன் பார்ப்பதன் அவசியம்; ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய நல்லது கெட்டது; ஒரு மனிதனுடைய வாழ்க்கையில், நடப்பது எல்லாமே நல்லது, நடப்பது எல்லாமே கெட்டது; நடந்தால் நல்லது, நடக்காமல் போனால் கெட்டது. இவ்வாறு நாம் பார்க்கிறோம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய நிகழ்வுகள் எப்படி உள்ளன, போன்ற விஷயங்கள், நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு எளிமையாக இந்த நூலில், அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளன.  

இந்த நூலில் உள்ள நிறைய நிகழ்வுகள், ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு செயல், ஒரு நிகழ்வாக மாறும் போது, ஒரு முடிவெடுக்கும் போது, ஆரம்பம் நமக்கு நன்றாகத் தான் இருக்கிறது. முடியக் கூடியது நமக்கு நன்றாகவும் இருக்கும், நன்றாக இல்லாமலும் இருக்கும். பிடித்து இருக்கும், பிடிக்காமல் இருக்கும். நடந்திருக்கும், நடக்காமல் இருக்கும். பயன்படும், பயன்படாமல் இருக்கும். ஆனால், முடிவு தெரிந்த பின் தான் நல்லது கெட்டது என முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், ஆரம்பிக்கும் போது, அது போகும் போது, நல்லது கெட்டது பற்றி நாம் யோசிப்பதே கிடையாது. 

உதாரணமாக, ஒரு தொழில் துவங்குகிறோம். தொழில் துவங்க வேண்டும் என நினைக்கிறோமே தவிர, லாபம் வருமே என நினைக்கிறோமே தவிர, அதில் லாபம் வரலாம், வராமலும் இருக்கலாம், என்பது பற்றி சிந்திக்கிறோமா என்ற கேள்வியை நம் முன் வைக்கிறது இந்த நூல். 

எல்லோரும் தொழில் ஓடும் என்று நினைத்துக் கொண்டு தான் துவக்குகிறோம். ஆனால், தொழில் ஓடாது, நடக்காது என்று ஆகும் போது, அப்போது முடிவுகள்,  ஒரு தெளிவான வரையறையோ, ஒரு திட்டமிடுதலோ, கண்ணோட்டமோ எப்படி இருக்கிறது என மறு பரிசீலனை செய்கிறோம். 

திட்டமிடல் கரெக்ட் ஆகத் தான் இருக்கும். ஆனால், திட்டமிட்டபடி வாழ்க்கையில் ஏதாவது நடக்குமா என்றால் நடக்காது. அப்போது திட்டமிட்டது, திட்டமிடாதது மாதிரி நடக்கிறது. திட்டமிட்ட மாதிரி நடந்திருந்தால், அதனை ப்ளானிங் என்று சொல்கிறோம், எண்ணங்கள் என்று சொல்கிறோம். திட்டமிட்டது திட்டமிட்டபடி நடந்தது. ஆனால், திட்டமிடாதது மாதிரி அதனுடைய முடிவுகள் இருந்தால், அதனுடைய நிகழ்வுகள் எல்லாம் ஆசைகள், மனது என நாம் சொல்கிறோம். 

எனக்குப் பிடித்திருக்கிறது, எனக்கு ஆசையாக இருக்கிறது. ஒரு தொழிலைத் துவங்குகிறேன். அதில் லாபம் வரும், வராமல் கூடப் போகும். இல்லை இல்லை இதனை நான் செய்தே தான் ஆக வேண்டும். எங்க அப்பா தொழில் இதனை நான் செய்தே ஆக வேண்டும் என ஒரு விஷயத்தை நான் தொடர்ச்சியாகச் செய்கிறேன். அது எனக்கு பெரிய அளவில் லாபம் இல்லா விட்டாலும் பரவாயில்லை, எனக்கு அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது என்கிற மாதிரி ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் நிறைய கேள்வி பதில்கள், என இந்த நூலானது, ஒரு வித்தியாசமான, அனைவரும் பார்க்கத் தவறும், பல் வேறு  கோணங்களை வாசகருக்கு காண்பிக்கிறது, இந்த நூல். 

மனித வாழ்வின் ஆழமான தத்துவங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இந்த நூல் அமைந்துள்ளது. 

காலத்தின் பல்வேறு பரிமாணங்களை விவரிக்கிறது இந்த நூல். இது மனித மனதின் உளவியல் பயணத்தையும், கலாச்சார மாற்றங்களையும் உள்ளடக்கமாக கொண்டுள்ளது. 

இந்த நூலில், பயணம் என்பது ஒரு உருவகமாக (metaphor) சொல்லப்பட்டுள்ளது. காலத்தில் பயணிப்பதை, ஆன்மீக மற்றும் தத்துவப் பயணமாக அணுகுகிறது, இந்த நூல். 

ஒரு எளிமையான, அதே சமயம் ஆழ்ந்த விஷயங்களை, கவித்துவமாகவும், உணர்வு பூர்வமாகவும் வெளிப்படுத்துகிறது, இந்த நூல். 

இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள சில நிகழ்வுகளின் தலைப்புகள்:

~ ஆரம்பம் ஒன்று; முடிவு பல. 

~ தவறை மறைத்தாலும் தண்டனை உண்டு. 

~ வாஸ்து, ஜாதகருக்கா, வீட்டிற்கா? 

~ ஜோதிடம் படித்தால், வாழ்க்கை மாறுமா? 

இங்கனம், நிகழ்வுகளின் தலைப்பே, படிப்பவரை ஆழ்ந்த சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. 

உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில்; காலம் உங்கள் கையில்; நடப்பது நன்மைக்கே; நல்லதே நடக்கும், என நேர் மறை எண்ணங்களை, நம் மனதில் விதைக்கிறது, இந்த நூல். 

வாருங்கள், நல்லனவற்றை விதைப்போம். சரியான விதத்தில் செயல்படுவோம். வாழ்க்கையில், நிறைவை, நிம்மதியை, திருப்தியை, அறுவடை செய்வோம், என அறைகூவல் விடுக்கிறது, இந்த நூல். 

நன்றி.


About author

ALP Astrology

Admin=> Have all rights




Scroll to Top